பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து அரசு பஸ் கவிழ்ந்தது 15 பயணிகள் படுகாயம்

பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து அரசு பஸ் கவிழ்ந்து விழுந்தது. இதில், 15 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2019-03-27 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து அரசு பஸ் கவிழ்ந்து விழுந்தது. இதில், 15 பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

15 பயணிகள் படுகாயம்

பெங்களூரு காவல் பைரசந்திராவில் இருந்து நேற்று காலையில் மாகடி ேராடு அருகே கே.எச்.பி. காலனிக்கு பி.எம்.டி.சி (அரசு) பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். காலை 10.45 மணியளவில் ராஜாஜிநகர், 1-வது பிளாக்கில் உள்ள மேம்பாலத்தில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.

பின்னர் மேம்பாலத்தில் இருந்து கீழே உள்ள சாலையில் அரசு பஸ் பல்டி அடித்து கவிழ்ந்து விழுந்தது. இதனால் பஸ்சுக்குள் சிக்கி கொண்டு பயணிகள் போராடினார்கள். இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பஸ்சுக்குள் சிக்கி பரிதவித்த பயணிகளை மீட்டனர். தகவல் அறிந்ததும் மல்லேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

டிரைவரின் கவனக்குறைவு

பின்னர் படுகாயம் அடைந்த அம்பிகா(வயது 30), கமலா(44), சுஷ்மிதா(2), சிக்கேகவுடா, ஜெயக்குமார் ஆகிய 5 பேரும் மல்லேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கண்டக்டர் விஜய்குமார்(52) உள்பட 10 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. படுகாயம் அடைந்த பயணிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பஸ்சை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விழுந்தபோது, கீழே உள்ள சாலையில் வாகன ஓட்டிகளோ, பாதசாரிகளோ செல்லவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மல்லேசுவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் வெஸ்ட் ஆப் சார்டு ரோட்டில் நேற்று காலையில் போக்குவரத்து நெரிசல் உண்டானதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

மேலும் செய்திகள்