நெடுஞ்சாலைகள் இல்லாததால் தேர்தல் பிரசாரத்தில் புறக்கணிக்கப்படும் கறம்பக்குடி பகுதி அரசியல் கட்சியினர் அதிருப்தி

தேசிய, மாநில நெடுஞ் சாலைகள் இல்லாததால் தலைவர்களின் தேர்தல் பிரசாரத்தில் கறம்பக்குடி பகுதி தொடர்ந்து புறக் கணிக்கப்படுவதாக அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Update: 2019-03-27 22:45 GMT
கறம்பக்குடி, 

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறுவதை தொடர்ந்து தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகளின் சார்பில், நட்சத்திர அந்தஸ்து கொண்ட பேச்சாளர்கள் பட்டியல், தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டு பிரசாரமும் களை கட்டியுள்ளது. தி.மு.க. சார்பில், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், திருச்சி சிவா உள்ளிட்ட 40 பேர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் அ.தி.மு.க.சார்பில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தவிர காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, அ.ம.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட பேச்சாளர்களின் தேர்தல் பிரசாரத்தில் கறம்பக்குடி பகுதி இடம் பெறவில்லை. திருச்சி, தஞ்சாவூர் என 2 நாடாளுமன்ற தொகுதிகள் கறம்பக்குடி எல்லைக்குள் இருந்தும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் இல்லாததால் தலைவர்களின் பிரசார பயணத்தில் கறம்பக்குடி பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் இல்லாமல் துண்டிக்கப்பட்ட பகுதி யாகவே கறம்பக்குடி உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு கந்தர்வகோட்டை வழியாகவும், புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு ஆலங்குடி வழியாகவும் மட்டும் நெடுஞ்சாலை வழித்தடம் உள்ளன. சுற்று பாதையாக மாவட்ட சாலை வசதியுடன் மட்டுமே கறம்பக்குடி தாலுகா பகுதி உள்ளதால் பிரசாரத்திற்கு இந்த வழித்தடத்தை தலைவர்கள் தேர்வு செய்வதில்லை.

அரசின் திட்ட பணிகள், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் தான் கறம்பக்குடி புறக்கணிக்கப்படு கிறது என்றால் அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக பார்ப்பதற்கோ, அவர்களின் பேச்சை கேட்பதற்கோ கூட கறம்பக்குடி மக்களுக்கு வாய்ப்பில்லை என்பது வேதனை தான். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ள வேளையில், தலைவர்களின் பிரசார பயணதிட்டத்தில் கறம்பக்குடி இம் முறையும் இல்லாதது அரசியல் கட்சியினரிடையே சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. “எங்க ஊருக்கும் யாராவது வாங்கப்பா” என ஏக்கத் துடன் காத்திருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்த எண்ணம் வாக்காளர்களிடமும் உள்ளது.

மேலும் செய்திகள்