வேட்பு மனுவுடன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து விவரம் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா குற்றச்சாட்டு

வேட்பு மனுவுடன் கார்த்தி சிதம்பரத்தின் சொத்து விவரம் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை என பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா குற்றச்சாட்டியுள்ளார்.

Update: 2019-03-27 23:15 GMT

சிவகங்கை,

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரம் முழுமையாக இல்லை. அதனால் அவரது மனுவை ஏற்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. தேனி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கு துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் என்ற தகுதியை தவிர வேறு ஏதுவும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது. எனவே மற்றவர்களை குறை கூற அவருக்கு தகுதியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்