ஏரியில் மண் எடுக்க சென்ற 42 லாரிகள் சிறைபிடிப்பு கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
ஏரியில் மண் எடுக்க சென்ற 42 லாரிகளை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுக்கம்பாறை,
வேலூர் அருகே ஊசூரை அடுத்த சேக்கனூரில் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும் இந்த ஏரி தற்போது வறண்டு காணப்படுகிறது. விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக இந்த ஏரியிலிருந்து கலெக்டர் அனுமதியுடன் பொதுப்பணித்துறை மூலம் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லாரிக்கு மண் எடுக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு மண் எடுக்கப்படுகிறது.
தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியிலிருந்து மண் அள்ளப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த மண் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. காலை முதல் இரவு வரை இவ்வாறு மண் எடுத்துச்செல்லும் லாரிகளால் சாலைகள் சேதம் அடைவதாகவும், அசுர வேகத்தில் செல்லும் இந்த லாரிகளால் தங்கள் கிராமத்தில் விபத்து ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
மேலும் இவ்வாறு மண் எடுக்கும்போது அந்த கிராமமே நிரந்தர புழுதி மண்டலத்தில் சிக்கி தவிக்கிறது. அதன் காரணமாக கிராம மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுவதாகவும், இருசக்கர வாகனங்களில் ஊருக்கு வரும்போது புழுதி மண்டலம் காரணமாக எதிரே வருபவர்கள் கூட தெரியாமல் அவர்கள் மீது மோதும் நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதால் ஏரியிலிருந்து மண் எடுக்க சேக்கனூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மணல் அள்ளுவது தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரிக்கு செல்லும் சாலையில் திரண்டு மண் எடுக்க வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 42 லாரிகளை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ஊசூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவுதம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து கலெக்டருக்கு தெரிவித்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அதன்பின் லாரிகள் வழக்கம்போல் மண் எடுத்துச்சென்றன.