கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

மின்வசதி செய்து தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-27 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியை அடுத்துள்ளது கல்கிணற்றுவலசை. இந்த கிராமத்தைச் சேர்ந்த தனுசியா, நாகேஸ்வரி, பாக்கியலட்சுமி ஆகியோர் தலைமையில் ஏராளமான கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி கேட்டு ராமநாதபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வீரராகவராவ் நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுக்களை பரிசீலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் கோரிக்கை மனுவை வழங்குங்கள். உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்காத கிராம மக்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்காமல் செல்லமாட்டோம் என கூறி கலெக்டர் கார் நிற்குமிடம் அருகே பல மணி நேரம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– கல்கிணற்றுவலசை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 10 வருடங்களுக்கு மேல் 75 வீடுகள் கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறோம். ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர், அவர்களுக்கு வேண்டிய 15 குடும்பத்தினருக்கு மட்டும் ரசீது கொடுத்து மின்சாரம் வழங்கப்பட்டுஉள்ளது. மீதம் உள்ள குடும்பங்களுக்கு வீட்டு வரி ரசீது தரவில்லை. அதனால் மின் இணைப்பு பெற முடியவில்லை.

இதனால் 60 குடும்பத்தினர் மின்சார வசதி பெற முடியாமல் பாதிக்கப்பட்டுஉள்ளோம். இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வீட்டு வரி ரசீது வழங்கி மின் இணைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

மேலும் செய்திகள்