டெபாசிட் பணம் மோசடி செய்ததாக புகார்: திங்களூர் தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை பெருந்துறை அருகே பரபரப்பு
டெபாசிட் பணம் மோசடி செய்ததாக கூறி பெருந்துறை அருகே உள்ள திங்களூர் தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை ஒன்றியம், திங்களூர் அருகே வெட்டயன்கிணறு கிராமம் உள்ளது. இந்த ஊரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அந்த பகுதியில் கூலி தொழில் செய்து வரும் பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்து வந்தனர். நிரந்தர வைப்பு கணக்கு, காலமுறை வைப்பு கணக்கு, சேமிப்பு கணக்கு, ஆயுள் காப்பீட்டு திட்டம் என பல்வேறு வகையான கணக்குகளை தொடங்கி, சுமார் ரூ.50 லட்சத்திற்கு மேலான பணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஊரைச் சேர்ந்த பாக்கியம் (70) என்ற மூதாட்டி, தான் செலுத்திய பணம் ரூ.1 லட்சத்தை எடுக்க நேற்று முன்தினம் தபால் நிலையம் சென்றார். அப்போது தபால் நிலையம் பூட்டப்பட்டிருந்தது.
இதை அறிந்த பாக்கியத்தின் பேரன் மகேஷ்குமார் தனது பாட்டியின் தபால் சேமிப்பு கணக்கு புத்தகத்தை வாங்கி கொண்டு, திங்களூர் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று சேமிப்பு கணக்கை சரிபார்த்தார். அதில் 1 ஆண்டுக்கு முன்பே பாக்கியத்தின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.1லட்சம் எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் 2 பேரும் வெட்டயன்கிணறு கிராமத்தில் உள்ள அனைவரிடம் கூறினர். உடனே அந்த பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் தாங்கள் டெபாசிட் செய்திருந்த அஞ்சலக சேமிப்பு கணக்குகளுடன் மோசடி செய்ததாக கூறப்படும் தபால்காரருடன் நேற்று திங்களூர் தபால் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து நல்லம்மாள்(60) என்பவர் கண்ணீருடன் கூறுகையில், ‘கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சத்தை, 5 ஆண்டு திட்டத்தில் டெபாசிட் செய்தேன். தற்போது வந்து கணக்கை சரிபார்க்கும்போது அந்த பணம் தனது கணக்கில் இல்லை’ என்றார். அதேபோல் பழனிச்சாமி (60) என்பவரது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், கரிச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி பொங்கியண்ணன் (55) என்பவரது கணக்கில் இருந்து ரூ.3 லட்சமும் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதுதவிர ரூ.45 ஆயிரம், ரூ.50 ஆயிரம், ரூ.55 ஆயிரம் என மோசடி நடந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மொத்தம் வெட்டயன்கிணறு அஞ்சலக சேமிப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் முதலானவற்றில் ரூ.50 லட்சத்திற்கும் மேலாக கையாடல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் ஈரோடு மாவட்ட அஞ்சலக குறை தீர்ப்பு அதிகாரி லாவண்யா நேற்று திங்களூர் வந்து பொதுமக்களிடமும், சம்பந்தப்பட்ட தபால்காரரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது அவரும், தபால் நிலையக்காரரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் அதிகாரி பொதுமக்களிடம் கூறும்போது, ‘இந்த அஞ்சலக மோசடி குறித்த விசாரணை முடிந்ததும், உரிய ஆவணங்களை வைத்துள்ள அனைவருக்கும் அவர்கள் டெபாசிட் செய்த பணம் திருப்பி தரப்படும். இந்த அஞ்சலக மோசடி விசாரணையை நடத்தி முடிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும்’ என்றார்.
தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்ததும் தபால் நிலையக்காரர் மாயமானார்.