வானவில் : மஹிந்திராவின் கவச வாகனங்கள்
மஹிந்திரா நிறுவனம் சி.ஐ.எஸ்.எப். வீரர்களுக்கு புதிய கவச வாகனத்தை தயாரித்து தந்துள்ளது.;
எஸ்.யு.வி.க்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு (சி.ஐ.எஸ்.எப்.) புதிய கவச வாகனத்தை தயாரித்து தந்துள்ளது. உடனடியாக செயல்படும் குழுவினருக்கு (க்யூ.ஆர்.டி.) இந்த வாகனங்கள் தயாரித்துத் தரப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கு ‘மஹிந்திரா மார்க்ஸ்மேன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சி.ஐ.எஸ்.எப். வீரர்கள் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த வாகனத்தில் 6 பேர் பயணிக்க முடியும். முதல் வரிசையில் டிரைவர் மற்றொரு பயணி இது தவிர பின்னிருக்கையில் இரண்டு வரிசை இதில் தலா 2 பேர் பயணிக்க முடியும். இது பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் கையெறி குண்டு வீச்சு மற்றும் தரையில் குண்டு வெடித்தாலும் தாங்கி நிற்கும் அளவுக்கு உறுதியானவை. இது 2.2 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் என்ஜினைக் கொண்டது. ஸ்கார்பியோ தயாராகும் அதே லைனில் இவையும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இது கவச வாகனம் ஆதலால் இதன் எடை அதிகம். இதன் மூலம் கவச வாகன தயாரிப்பிலும் முத்திரை பதித்துள்ளது மஹிந்திரா.