கொலை வழக்கில், விவசாயிக்கு 10 ஆண்டு சிறை - வேலூர் கோர்ட்டு தீர்ப்பு
கொலை வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வேலூர்,
வேலூரை அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41), விவசாயி. இவருடைய தாத்தா முனுசாமிக்கு ரங்கநாயகி, காந்தம்மாள் என 2 மனைவிகள் இருந்தனர். இதில் காந்தம்மாளின் மகள் செல்வி. இவருடைய மகள் லட்சுமியை செந்தில்குமார் திருமணம் செய்து கொண்டார்.
இதற்கிடையே செந்தில்குமாருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே சொத்துப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் காந்தம்மாள், செந்தில்குமாரை கண்டித்துள்ளார். அதற்கு நீ எனது தாத்தாவுக்கு இரண்டாவது மனைவி தான். அதனால் சொத்துப்பிரச்சினையில் தலையிட உனக்கு உரிமை இல்லை என்று செந்தில்குமார் கூறினார்.
மேலும் காந்தம்மாள் மீது கோபத்துடன் இருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதியன்று காந்தம்மாள் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கு சென்ற செந்தில்குமார், திடீரென காந்தம்மாளை வெட்டிக் கொலை செய்தார்.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் மாவட்ட விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி குணசேகரன் வழக்கை விசாரித்து, செந்தில்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் சென்னை ஐகோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பின் அடிப்படையில் செந்தில்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு 2 மாதத்திற்குள் உரிய இழப்பீடு வழங்கவும் சட்டஉதவி மையத்துக்கு பரிந்துரை செய்தார்.