சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரிப்பு குர்லா ரெயில் நிலைய பிளாட்பார உணவகத்துக்கு ‘சீல்’ ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை

குர்லா ரெயில் நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயாரித்த உணவகத்தை ரெயில்வே அதிகாரிகள் ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர்.

Update: 2019-03-26 23:00 GMT
மும்பை, 

குர்லா ரெயில் நிலையத்தில் சுகாதாரமற்ற முறையில் லெமன் ஜூஸ் தயாரித்த உணவகத்தை ரெயில்வே அதிகாரிகள் ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர்.

பிளாட்பார உணவகங்கள்

மும்பையில் உள்ள புறநகர் ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் வடபாவ், டீ, காபி மற்றும் குளிர்பானங்கள், நொறுக்குதீனிகள் என பல்வேறு உணவுபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த உணவு பொருட்களை பயணிகள் அதிகளவில் வாங்கி சாப்பிடுகின்றனர்.

அதிலும், குறிப்பாக வெயில் காலத்தில் இந்த உணவகங்களில் லெமன் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வாங்கி குடிப்பதற்காக ஈ மொய்த்தது போல் பயணிகள் கூட்டம் காணப்படும்.

சுகாதாரமற்ற ஜூஸ்

இந்தநிலையில், மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள குர்லா ரெயில் நிலையத்தில் உள்ள 7-வது பிளாட்பாரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பயணிகளுக்கு வழங்குவதற்காக சுகாதாரமற்ற முறையில் தொழிலாளி ஒருவர் லெமன் ஜூஸ் தயார் செய்யும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில், சுத்தமில்லாத தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து லெமன் ஜூஸ் தயார் செய்யும் அந்த தொழிலாளி, பின்னர் ஒரு பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் தனது இரண்டு கைகளையும் உள்ளே விட்டு கழுவுகிறார். பின்னர் அந்த தண்ணீருக்குள்ளேயே தான் தயாரித்து வைத்திருந்த லெமன் ஜூசையும் ஊற்றி மூடி வைத்து விடுகிறார்.

‘சீல்’ வைத்து நடவடிக்கை

இதை ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் நின்ற யாரோ ஒரு பயணி தனது செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோ காட்சியை ரெயில்வேயின் டுவிட்டர் பக்கத்திலும் அந்த பயணி வெளியிட்டார்.

இந்த வீடியோ ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்தநிலையில், ரெயில்வே அதிகாரிகள் அதிரடியாக அந்த உணவகத்தில் சென்று சோதனை நடத்தினார்கள்.

மேலும் அங்கிருந்த லெமன் ஜூசை பறிமுதல் செய்து ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த உணவகமும் ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.

இதனையடுத்து அந்த உணவகத்தை நடத்தும் உரிமம் வைத்திருப்பவரிடம் நேற்று இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்