பொள்ளாச்சி பாலியல் வழக்கு, பார் நாகராஜ், தி.மு.க. பிரமுகருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் - நாளைக்குள் ஆஜராக உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பார் நாகராஜ், தி.மு.க. பிரமுகர் ஆகியோர் நாளைக்குள் (வியாழக்கிழமை) ஆஜராக வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

Update: 2019-03-26 23:30 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27) மற்றும் அவரது கூட்டாளிகளான சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இதில் திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த சம்பவத்தையொட்டி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியா யின. விசாரணையின் போது, திருநாவுக்கரசு அளித்த தகவலின்பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த பார் உரிமையாளர் நாகராஜ்(வயது 28) தி.மு.க. புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜின் மகனும் நகர மாணவர் அணி அமைப்பாளருமான தென்றல் மணிமாறன் (27) ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில் அவர்கள் 2 பேரும் நாளைக்குள் (வியாழக்கிழமை) கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

வட்டிக்கு பணம் கொடுத்து வந்த திருநாவுக்கரசுக்கு பார் நாகராஜ் மற்றும் சிலர் நண்பர்கள் ஆனார்கள். திருநாவுக்கரசு மீது கல்லூரி மாணவி புகார் கொடுத்த உடன் பார் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாணவியின் அண்ணனை தாக்கினார்கள். இது குறித்த புகாரின் பேரில் பார் நாகராஜ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பார் நாகராஜ் மற்றும் திருநாவுக்கரசுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி இருக்கலாம் என்று தெரிகிறது.

தென்றல் மணிமாறன், திருநாவுக்கரசுடன் முகநூலில் நட்பாக இருந்துள்ளார். எனவே அவர்களுக்குள் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. பார் நாகராஜ் பொள்ளாச்சி நகர 34-வது வார்டு ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வந்தார். அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்