மின்சார ரெயில்கள் வரும் இடத்தை அறிய செயலி மத்திய ரெயில்வே அறிமுகம் செய்கிறது

ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மின்சார ரெயில் வந்து கொண்டு இருக்கும் இடத்தை அறிய மத்திய ரெயில்வே செல்போன் செயலியை அறிமுகம் செய்கிறது.

Update: 2019-03-26 23:00 GMT
மும்பை, 

ரெயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மின்சார ரெயில் வந்து கொண்டு இருக்கும் இடத்தை அறிய மத்திய ரெயில்வே செல்போன் செயலியை அறிமுகம் செய்கிறது.

மின்சார ரெயில் சேவை

மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியாக விளங்கும் புறநகர் மின்சார ரெயில் சேவையை சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மின்சார ரெயில் சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.

மும்பை புறநகர் ரெயில் நிலையங்களில் வழக்கமான நேரத்தை விட மின்சார ரெயில் சேவை சில நிமிடங்கள் தாமதித்தாலும் கூட பிளாட்பாரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

செல்போன் செயலி

எனவே முண்டியடித்துக் கொண்டு முதல் ஆளாக ஏறிவிட வேண்டும் என்பதற்காக ரெயில் வந்து விட்டதா? என பயணிகள் ஒவ்வொருவரும் பரிதவிப்புடன் பார்த்து கொண்டு இருப்பார்கள்.

இந்தநிலையில், தாங்கள் பயணிக்க காத்திருக்கும் மின்சார ரெயில் எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டு இருக்கிறது என்பதை பயணிகள் அறிந்து கொள்வதற்காக மத்திய ரெயில்வே புதிய செல்போன் செயலியை அறிமுகம் செய்கிறது.

ஜி.பி.எஸ் கருவிகள்

இதற்கான டெண்டர் விடப்பட்டு ரெயில்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தும் பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த பணிகள் வருகிற ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்த பின் பயணிகள் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இந்த செயலி மூலம் பயணிகள் புறநகர் மின்சார ரெயில்களின் வருகை நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம், காலதாமதம் மற்றும் சேவையில் ஏற்படும் தடை உள்ளிட்ட தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்