கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளுக்கு 340 பேர் மனு இன்று மனுக்கள் பரிசீலனை
கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதி களுக்கு வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதி களுக்கு வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. இதில் மொத்தம் 340 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அந்த மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
முதல்கட்ட தேர்தல்
கர்நாடகத்தை பொறுத்தவரையில் இந்த தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
2-வது கட்ட தேர்தல் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா
இந்த 14 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் வரை 181 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இதில் முக்கியமாக காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா துமகூரு தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூரு வடக்கு தொகுதியிலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகள் வீரப்பமொய்லி சிக்பள்ளாப்பூர், கே.எச்.முனியப்பா கோலார் தொகுதிகளிலும் மனு தாக்கல் செய்தனர்.
காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, அவரை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாக மண்டியா தொகுதியில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மந்திரி கிருஷ்ண பைரேகவுடா
ஹாசன் தொகுதியில் தேவேகவுடாவின் பேரனும், பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு களம் இறங்கியுள்ளார்.
பஞ்சாயத்து ராஜ், கிராம வளர்ச்சி மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூரு வடக்கு தொகுதியில், மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார். அவர் கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்தார்.
340 வேட்பாளர்கள் மனு தாக்கல்
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பி.கே.ஹரிபிரசாத், பெங்களூரு தெற்கு தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் 28 வயதே ஆன தேஜஸ்வி சூர்யா மனு தாக்கல் செய்தார். கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் மொத்தம் 340 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் 452 மனுக்களை தாக்கல் செய்து இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் சுமார் 150 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர். இதில் அதிகபட்சமாக பெங்களூரு வடக்கு தொகுதியில் 37 பேரும், குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகரில் 13 பேரும் மனுக்களை தாக்கல் செய்தனர். கடைசி நாளில் வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரை போலீசார் கட்டுப்படுத்தினர்.
மனுக்கள் பரிசீலனை
தேர்தல் அலுவலகங்களில் நேற்று பகல் 3 மணியுடன் மனு தாக்கல் முடிவடைந்தது. மனுக்கள் பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. மனுக்கள் ஏற்பு மற்றும் நிராகரிப்பு இதில் தெரியவரும். அதன் பிறகு மனுக்களை வாபஸ் பெற 29-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் பிறகு கர்நாடகத்தில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடையும்.