கோவை அருகே பயங்கரம், 7 வயது சிறுமி கடத்தி கொலை - கை, கால் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உடல் மீட்பு
கோவை அருகே கடைக்கு சென்ற 7 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டார். கை, கால் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உடல் மீட்கப்பட்டது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
துடியலூர்,
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கிவரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடுதிரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவளது பாட்டி அந்த கடைக்கு சென்று கேட்டார். அங்கு வெற்றிலை வாங்கிவிட்டு சிறுமி சென்றுவிட்டதாக கடைக்காரர் தெரிவித்து உள்ளார். தன்னுடன் படிக்கும் சிறுமிகளின் வீடுகளுக்கு விளையாட சென்று இருக்கலாமோ என்று அவளை தேடி சென்றார். ஆனால் அங்கும் அவள் இல்லை.
இதற்கிடையே அந்த சிறுமியின் தாய் வேலையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் பாட்டி நடந்ததை எடுத்து கூறினார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த தாய் தனது குழந்தையை கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தேடிப்பார்த்தார். இருப்பினும் அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் விசாரணை நடத்தினர். அவர்களும் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நள்ளிரவு 1 மணி வரை குழந்தையை தேடிப்பார்த்தனர். அந்த சிறுமி தன்னுடன் படிக்கும் தோழிகளின் வீடுகளுக்கு சென்று இருக்கலாம். நேரமாகிவிட்டதால் அங்கேயே தூங்கியிருக்கலாம். எனவே காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்றவாறு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில், சிறுமியின் வீடு அருகே இரண்டு கட்டிடங்களுக்கு இடையே சந்து பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சிறுமியின் உடல் காயங்களுடன் டி-சர்ட் மூலம் சுற்றிவைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்தது. பதறிப்போய் அலறியடித்து ஓடிச்சென்று அந்த சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
பின்னர் அந்த சிறுமியை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன், துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் மற்றும் போலீசார் சிறுமியின் உடல் கிடந்த இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் அவர் கள் அங்குள்ள மளிகைகடைக்கு சென்று கடை உரிமையாளரிடம் விசாரித்தனர்.
அதன்பிறகு போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடமும், வகுப்பு ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமியை வகுப்புக்கு இடையில் பெற்றோர் தவிர வேறு யாரேனும் அழைத்து சென்றனரா? என்பது குறித்து விசாரித்தனர்.
தொடர்ந்து போலீசார் பன்னிமடை பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் வங்கியில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டும், சந்தேகத்துக்கு இடமான நிலையில் உள்ள இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த சிறுமியின் உடலில் உதடு மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் உள்ளன. இதனால் அந்த சிறுமி கடத்தப்பட்டு, கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும், சிறுமியின் சாவுக்கு நீதிகிடைக்க வேண்டும், என்று கூறி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் இமானுவேல், ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக் டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறுமியை கடத்தி கொன்றவர்களை கைதுசெய்து உரிய தண்டனை வழங்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களது உறவினர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கண்ணீருடன் கூறியதாவது:-
எனக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தன. அதில் முதல் குழந்தையை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தேன். அவள் எந்த பொருள் கேட்டாலும் அதை வாங்கி கொடுப்பேன். உறவினர்களின் வீடு தவிர பிற வீடுகளுக்கு சென்று உணவு அருந்த அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு செல்லமாக வளர்த்த குழந்தையை கொன்றுவிட்டார்கள். எனது குழந்தை எப்படி துடிதுடித்து இறந்ததோ? இதுபோன்று பிற குழந்தைகளும் பாதிக்கக்கூடாது. எனவே குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.