கூட்டணிக் கட்சிக்காக இறங்கி பணியாற்ற வேண்டும் தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு வாக்கும் முக்கியம் பா.ஜ.க.வினருக்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள்
தேர்தலில் வெற்றிபெற ஒவ்வொரு வாக்கும் என்பதை மனதில் கொண்டு கூட்டணி கட்சிக்காக களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்று பா.ஜ.க.வினருக்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சித்தன்குடியில் உள்ள ஜெயராம் திருமண நிலையத்தில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுவை எம்.பி. தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு சால்வை அணிவித்து மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் வாழ்த்து தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 2014–ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. நமது கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக இருந்தார். ஆனால் கடந்த 2016–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தது. அதன் பின்னர் புதுவையில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் திட்டங்களை புதுவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இலவச அரிசி திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. பஞ்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வரவில்லை. மருத்துவ திட்டங்கள் மேம்படுத்தப்படவில்லை. 4 ஆயிரம் மில் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
புதுவையில் செயல்படாத முதல்–அமைச்சர் உள்ளார். செயல்படாத அரசு உள்ளது. தற்போது எதிர்க்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. வழக்கு உள்ளது. நமது வேட்பாளர் இளைஞர். துடிப்பானவர். உங்களுக்கு செயல்படுகின்ற எம்.பி. வேண்டுமா? செயல்படாத எம்.பி. வேண்டுமா?
மத்திய அரசு புதுவைக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.1,854 கோடி ஒதுக்கியுள்ளது. குடிநீர் திட்டத்திற்காக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இதற்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் தற்போது இந்தியா பாதுகாப்பாக உள்ளது. நாடு மேலும் பாதுகாப்பாக இருக்கவும், வளர்ச்சியடையவும் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அதற்கு நமது வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். நமது வேட்பாளர் வெற்றி பெற நீங்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். நாம் கூட்டணி கட்சியினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நமக்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதனை மனதில் வைத்து எல்லோரும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.