உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு காரில் எடுத்துச்சென்ற ரூ.40 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

மடுகரை சோதனை சாவடியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-26 22:15 GMT

நெட்டப்பாக்கம்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புதுவைக்கு வரும் வாகனங்கள் மற்றும் புதுவையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாசிலாமணி, கண்ணன், கோபாலகிருஷ்ணன், பிரதாப் சந்திரன், பிரதாப்குமார், தேவந்திரன் ஆகியோர் மடுகரை சோதனை சாவடியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் எந்த கட்டு கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது. இதை பறக்கும் படையினர் கைப்பற்றி, காரில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மெயின் கிளையில் இருந்து 40 லட்சம் பணத்தை ராம்பாக்கம் வங்கி கிளைக்கு தனியார் கார் மூலம் எடுத்துச்சென்றதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அந்த பணத்தை காருடன் பறிமுதல் செய்து மடுகரை புறக்காவல் நிலையத்துக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

உடனே காரில் வந்த அலுவலர்கள், இதுபற்றி வங்கி மேலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விழுப்புரம், ராம்பாக்கம் வங்கி மேலாளர்கள் மடுகரைக்கு விரைந்து வந்து, காரில் எடுத்து வந்த பணத்திற்கான ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து மாலை 6 மணியளவில் வங்கி மேலாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் மடுகரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்