தென்காசி நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க.- மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மனு தாக்கல்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.;
நெல்லை,
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளராக ராஜபாளையம் நகரசபை முன்னாள் தலைவி பொன்னுத்தாய் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று மதியம் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் மதியம் 2-35 மணிக்கு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் அமைப்பு செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயலாளர் பாப்புலர்முத்தையா, பொய்கை மாரியப்பன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட நிர்வாகி ஜாபர் அலி ஆகியோர் உடன் இருந்தனர். மாற்று வேட்பாளராக சுமதிகண்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து பொன்னுத்தாய் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்திற்கு என்ன தேவை? என்பதை துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு நன்றாக தெரியும். அவருடைய ஆலோசனையின் பெயரில் நாடாளுமன்றத்தில் பேசி மக்களின் தேவையை பூர்த்தி செய்வேன். தென்காசி தொகுதியில் உள்ள விவசாயிகளின் பிரச்சினையையும், சிறுகுறு தொழில் நடத்துபவர்களின் பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.
மக்கள் நீதிமய்யம்
மக்கள் நீதி மய்யத்தின் தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சிவகாசியை சேர்ந்த முனீஸ்வரன் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று காலை 11-30 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.