ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கணினியில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது
நெல்லையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்ற கணினியில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் என்ற கணினியில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொகுதி வாரியாக ஒதுக்கீடு
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் கீழ் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் வருகின்றன. தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியின் கீழ் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதுதவிர விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய 2 தொகுதிகள் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டு உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பிரித்து அனுப்பப்படுகிறது. 10 தொகுதிகளில் 2,979 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு 7,562 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், 3,870 கட்டுப்பாட்டு கருவி மற்றும் 4,160 யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை சரிபார்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.
எந்த வாக்குச்சாவடிக்கு எந்த எந்திரத்தை அனுப்புவது என்று அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. அனைத்து எந்திரங்களின் பதிவு எண்களும் கணினியில் பதிவேற்றம் செய்து, நேற்று குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
பலத்த பாதுகாப்பு
கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷில்பா தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது. இந்த எந்திரங்கள் ஓரிரு நாட்களில் அந்தந்த சட்டமன்ற தொகுதி தலைமையிடமான தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லும் போது கண்காணிப்பு கேமரா மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.