மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு அனுமதி மறுப்பு போலீசாருடன் வாக்குவாதம்

மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் ஆம்ஆத்மி கட்சிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2019-03-26 22:15 GMT

மானாமதுரை,

மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் மனுதாக்கல் செய்தனர். அப்போது தாமதமாக வந்த ஆம் ஆத்மி வேட்பாளரை போலீசார் தாலுகா அலுவலகத்தின் உள்ளே விட அனுமதி மறுத்தனர். அதனால் அந்த கட்சியினர் ஆவேசமடைந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுடன், மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நேற்று வரை மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் இளையான்குடியைச் சேர்ந்த ஆம்ஆத்மி கட்சி மாவட்ட பொறுப்பாளர் ராஜா தலைமையில் அந்த கட்சியைச் சேர்ந்த பிரபு என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்ய முடிவு செய்து நேற்று காலை தாலுகா அலுவலகம் வந்தார்.

அங்கு அவர் வேட்பு மனுவும் வாங்கியுள்ளார். மனுவில் சில திருத்தங்கள் இருந்ததால், அவற்றை சரிசெய்து செய்து விட்டு மதியம் 3 மணிக்கு தாலுகா அலுவலகம் வந்தார். ஆனால் போலீசார் நேரம் கடந்து என்று கூறி, பிரபுவை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அந்த கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சியினர் தாலுகா அலுவலகத்தில் இருந்து திரும்பி சென்றனர். இதுபற்றி மாவட்ட பொறுப்பாளர் ராஜா கூறுகையில், நாங்கள் காலையில் வேட்பு மனுவாங்கி சென்றுவிட்டோம், சரியாக 3 மணிக்கு தாலுகா அலுவலகம் முன்பு வந்து விட்டோம். ஆனால் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் ஒரு தரப்பிற்கு சாதகமாகவே செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்