இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் பரிதாபம்: பள்ளி வேன் மோதி மாணவன் பலி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த மாணவன் பள்ளி வேன் மோதி பலியானார்.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோடங்கிபட்டியை சேர்ந்தவர் சுந்தரரேஸ்வரன். இவருடைய மகன் கோகுல்பிரசாத் (வயது 4). சிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் வீரகாளியம்மன் நர்சரி பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான். இந்த கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி வேனில் மாணவ–மாணவிகள் அந்த பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல வேனில் பள்ளிக்கு சென்ற மாணவன், மாலை பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பினான். கோடாங்கிபட்டிக்கு வந்ததும், வேனில் இருந்து வீட்டின் அருகே இறக்கிவிடப்பட்ட கோகுல்பிரசாத் மீது அதே பள்ளி வேன் மோதியது.
அதில் வேனின் முன் சக்கரத்தில் சிக்கி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு வேன் டிரைவர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த கிராமத்தினர் ஒன்று திரண்டு வேன் டிரைவரை கைது செய்யக் கோரி போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் நேரில் விசாரணை நடத்தினார்.