அம்மாபேட்டை அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது

அம்மாபேட்டை அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது. மேலும் அந்தியூரில் மதுபாட்டில்கள் மற்றும் கட்சி கரை போட்ட துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-03-26 22:45 GMT

ஈரோடு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன்படி பவானி சட்டமன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோடீஸ்வரன் தலைமையில் சப்– இன்ஸ்பெக்டர் கஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாருதி காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின்போது அந்த காரில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 606 இருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயியான சோமசுந்தரம் (வயது 41) என்பதும், அவர் பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் குச்சிக்கிழங்கை விற்று ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 606– கொண்டு சென்றதும்’ தெரியவந்தது. உடனே அவர் அதற்குண்டான ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் காண்பித்தார். ஆனால் அந்த ஆவணத்தில் முரண்பாடுகள் இருந்ததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பவானி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து முறையான ஆவணத்தை சோமசுந்தரம் கொடுத்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் அந்தியூர் சட்டசபை தொகுதி பறக்கும் படை தேர்தல் அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர் பள்ளியபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அட்டை பெட்டியுடன் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்த அட்டையை பெட்டியை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 65 மது பாட்டில்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர் அந்தியூர் அருகே உள்ள ஊஞ்சக்காட்டை சேர்ந்த குருமூர்த்தி (வயது 24) என்பதும், அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும்,’ தெரியவந்தது. அதுமட்டுமின்றி இதே குழுவினர் அத்தாணி கைகாட்டிபிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அட்டை பெட்டியில் 36 மது பாட்டில்கள் மற்றும் ஒரு சாக்கு மூட்டையில் காங்கிரஸ் கட்சி கரை போட்ட 100 துண்டுகள் வைத்திருந்ததாக ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (36) என்பவரையும் பிடித்தனர். பிடிபட்ட 2 பேரிடம் இருந்து மொத்தம் 101 மது பாட்டில்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி கரை போட்ட 100 துண்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை கோபி தாசில்தார் கணேசனிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி கோபி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அந்தியூர் சென்று மது பாட்டில்களை பதுக்கி விற்க முயன்றதாக குருமூர்த்தி மற்றும் ஜெகநாதனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்