தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2019-03-26 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 48 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று காலை 11 மணி முதல் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வந்து கொண்டே இருந்தனர்.

நேற்று அ.ம.மு.க. வேட்பாளர் புவனேசுவரன், மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் பொன்குமரன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். மனுதாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

48 வேட்பாளர்கள்

அப்போது, 13 பேர் மனுதாக்கல் செய்வதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காத்து இருந்தனர். இதனால் அவர்களின் பெயர்களை எழுதி வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வேட்பாளராக சென்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு தாக்கல் மாலை 5-30 மணி வரை நீடித்தது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 28 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். 3 மணிக்கு பிறகு ஒருவர் மனுதாக்கல் செய்வதற்காக வந்தார். ஆனால் அதிகாரிகள் அவரை அனுமதிக்கவில்லை.

மனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தி.மு.க., பா.ஜனதா உள்பட மொத்தம் 48 வேட்பாளர்கள் 62 மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர்.

பலத்த பாதுகாப்பு

வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் என்பதால் அதிகளவில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் வந்த கார்களில் பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்தினர்.

வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனையின்போது வேட்பாளர், அவருடைய தேர்தல் முகவர், முன்மொழிந்த ஒரு நபர் மற்றும் வேட்பாளரால் எழுத்து மூலமாக அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு நபர் ஆக மொத்தம் 4 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து வருகிற 29-ந்தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்