மோட்டார் சைக்கிள்கள் மோதல், தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பலி
சத்திரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சத்திரப்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா வீரலப்பட்டியை சேர்ந்த ஞானசேகர் மகன் தினகரன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் கோழி விற்பனை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இதற்காக இவர் தினமும் மோட்டார் சைக்கிளில் சத்திரப்பட்டி வந்து, அங்கிருந்து பஸ்சில் உடுமலை சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக தினகரன் தனது மோட்டார் சைக்கிளில் சத்திரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வேலூரை அடுத்து சென்றபோது, திடீரென தினகரன் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே சத்திரப்பட்டி முல்லைநகரை சேர்ந்த மணிகண்டன் மகன் மனோஜ் சிவா (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினகரன் பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக கோவை செல்லும் வழியில் மனோஜ் சிவாவும் இறந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.