காட்ரம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

காட்ரம்பாக்கம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-26 22:00 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கம் ஊராட்சியில் பூங்காவனத்தம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். தெரு போன்ற பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றும், ஒருசிலர் முறைகேடாக தொட்டி அமைத்து அதில் தண்ணீரை அதிக அளவில் சேமித்து வைத்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காட்ரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்கள் முறையாக குடிநீர் வழங்கவேண்டும் என்று கோஷமிட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்னா வசந்தி வருவதற்கு தாமதம் ஆனதால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பொதுமக்களிடம் முறையாக குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்