இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது ‘கூவம் ஆறு’ நீர்வழி போக்குவரத்து தொடங்கவும் திட்டம்

சென்னையில் இழந்த அடையாளத்தை மீண்டும் கூவம் ஆறு பெற இருக்கிறது. இதில் நீர் வழி போக்குவரத்து தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Update: 2019-03-26 23:00 GMT
சென்னை,

கூவம், அடையாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய 3 ஆறுகள் சென்னை மாநகரில் ஓடுகின்றன. கூவம் ஆற்றில் ஒரு காலத்தில் தூயநீர் ஓடியது. மீன்பிடி தொழிலும், படகு போட்டிகளும் நடைபெற்றன. மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக மாசு நிறைந்த ஆறாக ஓடுகிறது. இந்த ஆறு மொத்தம் 75 கி.மீ. ஓடுகிறது. புறநகரில் 40 கி.மீ., மாநகருக்குள் 15.94 கி.மீ. ஓடுகிறது. கூவம் ஆறு,

திருவள்ளூர் மாவட்டம் கேசாவரம் என்ற சிற்றூரில் கல்லாறின் கிளையாறாக உருவாகிறது. இங்கு உருவாகும் இந்த ஆறு சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த ஆறு ஒரு வடிகாலாக செயல்பட்டதால் சென்னை மாநகரம் பெரும்பாதிப்புக்கு உள்ளாகாமல் தப்பியது.

சென்னைக்கு அழகு சேர்த்த கூவம் ஆறு தற்போது கழிவுநீர் ஓடும் ஆறாக உள்ளது. ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுசூழல் சீரமைப்பு திட்டம் மூலம் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் தமிழக அரசு இறங்கி உள்ளது. கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு என்ற இடத்தில் தொடங்கி, கடலில் கலக்கும் இடம் வரை, 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக, ரூ.604 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, கழிவுநீர் அகற்று வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளுடன் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைந்து பணிகளை விரைவுபடுத்தி வருகிறது.

ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கம், கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்தல், திடக்கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தல், கூவம் ஆற்றங்கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான திட்டமிடல், பல்லுயிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தி நகர்ப்புறங்களில் நதியின் கரையோரங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதே ஆகும். அத்துடன் வரும் காலங்களில் நீர் வழி போக்குவரத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கூவம் ஆற்றின் ஓரம் உள்ள ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்றி, 9 இடங்களில் பூங்காக்களை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதில் சேத்துப்பட்டு பகுதியில் முதல் கட்டமாக பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சென்னை குடிநீர் வாரியம் தற்போது தேவையான பல இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைத்து வருகிறது.

திட்ட அறிக்கையின்படி புதிதாக அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களுக்கான பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது. பேபி கால்வாய் என்ற பெயரில் ஆற்றின் இருபுறமும் கற்கள் பதித்து நீர் ஓட்டத்தை முறைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. கூவம் கரையோரம் முழுவதும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஆற்றில் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை பொதுப்பணி துறை செய்யும். மறு குடியமர்வு திட்டங்களை குடிசை மாற்று வாரியம், மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கூவம் நதியை முழுமையாக சீரமைத்திட ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டப் பணிகள் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூவம் நதியின் தற்போதைய நிலை, பகுதிவாரியாக நீரின் தன்மை, ஆக்கிரமிப்புகள் விவரம், மழைநீர் வடிகால்களில் இருந்தும், பெரிய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவும் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது போன்ற விவரங்கள் முதலில் சேகரிக்கப்பட்டன. முதல்கட்டமாக முதல் 3 ஆண்டுகளில் குறுகிய கால திட்டமாக 60 துணை திட்டங்களும், இரண்டாம் கட்டமாக 4 முதல் 8 ஆண்டுகளில் 7 துணை திட்டங்களும், மூன்றாம் கட்டமாக சீரமைப்பு பணிகள் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டம் ரூ.1,934 கோடியே 84 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையில் இருந்து கூவம் முகத்துவாரம் வரையிலான 27.3 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் நதிப் பகுதிகளை சீரமைத்திட ரூ.604 கோடியே 77 லட்சம் செலவிலான ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச் சூழல் சீரமைப்பு திட்டத்திற்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி இருந்தார். தற்போது போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கூவம் ஆறு தூர்வாரும் பணி 40 சதவீதம் முடிவடைந்து உள்ளது. ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி 400 சதுர கிலோ மீட்டராகும். ஆற்றுப்படுகையின் அகலம் 40 முதல் 120 மீட்டர் வரை உள்ளது. ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு நொடிக்கு 22 ஆயிரம் கன அடி ஆகும். தூர்வாரி எடுக்கப்பட்ட மணல் மூலம் கூவம் ஆற்றின் கரையும் பலப்படுத்த பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இழந்த அடையாளத்தை கூவம் ஆறு மீண்டும் பெறும் காலம் விரைவில் வரும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

மேலும் செய்திகள்