நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: தந்தை கண் எதிரே பள்ளி மாணவன் பரிதாப சாவு

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில, தந்தை கண் எதிரே பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-03-26 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அப்பகுதியில் ஓவியப்பள்ளி நடத்தி வருகிறார். இவருடைய மகன் நிஷ்வா (வயது 7). இவன் ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். இவனை கிருஷ்ணகுமார் தினமும் காலையில் மோட்டார் சைக்கிளில் கொண்டு பள்ளியில் விடுவதும், மாலையில் வீட்டுக்கு அழைத்து செல்வதும் வழக்கம்.

இதேபோல் நேற்று காலையிலும் கிருஷ்ணகுமார் தனது மோட்டார் சைக்கிளில் நிஷ்வாவை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். வடசேரி பள்ளிவாசல் அருகில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டாரஸ் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் நிலைதடுமாறிய கிருஷ்ணகுமார் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அப்போது பின்னால் அமர்ந்து இருந்த மாணவன் நிஷ்வா லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான். கிருஷ்ணகுமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். தன் கண் முன்னே மகன் பலியான சம்பவத்தை பார்த்து கிருஷ்ணகுமார் கதறி அழுதார்.

 அதற்குள் அப்பகுதியில் இருந்தவர்கள் கிருஷ்ணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மாரியப்பன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரச மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவத்தின்போது அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் நிஷ்வா உடலைப்பார்த்து கண்ணீர் விட்டனர்.

 இந்த விபத்துக்கு காரணம் போக்குவரத்து நெரிசலே காரணம் என்றும், எனவே இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க இப்பகுதியில் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துகுறித்து கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்