குடகு அருகே, குட்டை சேற்றில் சிக்கி 10 வயது ஆண் யானை செத்தது

குடகு அருகே, குட்டை சேற்றில் சிக்கி 10 வயது ஆண் யானை செத்தது.

Update: 2019-03-25 22:00 GMT
குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா களத்மாடு கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. இந்த வனப்பகுதியின் அருகே ஏராளமான காபி தோட்டங்கள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த தொழிலாளர்களும், கிராம மக்களும் துர்நாற்றம் வீசிய இடத்தில் சென்று பார்த்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள குட்டை சேற்றில் உடல் அழுகிய நிலையில் ஒரு யானை செத்து கிடந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டை சேற்றில் சிக்கி செத்து கிடந்த யானையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதேப்பகுதியில் யானை தகனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், செத்து போனது 10 வயது நிரம்பிய ஆண் யானையாகும். வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் குடிக்க வந்த யானை குட்டை சேற்றில் சிக்கி இறந்து உள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்