பா.ஜனதாவினர் அபிவிருத்தி பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றனர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் - ஜனார்த்தன பூஜாரி பரபரப்பு பேட்டி
நாடு முழுவதும் பா.ஜனதாவினர் அபிவிருத்தி பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்றும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் ஜனார்த்தன பூஜாரி கூறினார்.
மங்களூரு,
கர்நாடகத்தில் 2 கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தட்சிண கன்னடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மிதுன்ராய் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் நேற்று மிதுன்ராய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜனார்த்தன பூஜாரியை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்த சந்திப்பின் போது தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர், உடுப்பி மாவட்ட பொறுப்பு மந்திரி ஜெயமாலா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு ஜனார்த்தன பூஜாரி பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தட்சிண கன்னடா தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நளின்குமார் கட்டீல் என்னை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது நான் அவரை பாராட்டி, ஆசி வழங்கினேன்.
அவர் இந்த தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்து உள்ளார். அவரை எதிர்த்து இந்த தேர்தலில் நான் போட்டியிட்டாலும் எனது தோல்வி உறுதி.
நாடு முழுவதும் பா.ஜனதாவினர் அபிவிருத்தி பணிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். இதனால் மத்தியில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி. மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற மிதுன்ராயுடன், ஜனார்த்தன பூஜாரியும் சென்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜனார்த்தன பூஜாரி, மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று கூறியிருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.