தார்வாரில் 5 மாடி கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு - 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறை டி.ஐ.ஜி. பேட்டி
தார்வாரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறை டி.ஐ.ஜி. தெரிவித்தார்.
உப்பள்ளி,
தார்வார் டவுனில் 5 மாடி வணிக வளாக கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த 5 மாடி கட்டிடம் கடந்த 19-ந் தேதி இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தின் தரைதளம் மற்றும் முதலாவது தளத்தில் பணிகள் முடிந்து அங்கு கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வந்தன. மேலும் 3-வது மற்றும் 4-வது தளத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் மந்திரி வினய் குல்கர்னியின் மாமனார் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் கட்டிடத்திற்கு முைறகேடாக அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
தொடர்ந்து7-வது நாளாக நேற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தது. அப்போது 3 பேரின் உடல்கள் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. போலீஸ் விசாரணையில், அவர்களது பெயர்கள் நாவலு ஜாரே, வக்கூ ஜாரே, சகாதேவா சாலுங்கி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது. நேற்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த கட்டிட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று நடந்த மீட்பு பணிகளை கர்நாடக தீயணைப்புத் துறை டி.ஐ.ஜி. ரவி கன்டே கவுடா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களாக மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டனர். இதில் 288 பேர் தீயணைப்பு படையினர், கர்நாடக மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 32 பேரும் அடங்குவர். கட்டிடம் இடிந்த பகுதியில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் மீட்பு பணிகள் நிறைவடைந்துவிடும். மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைவருக்கும் அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தார்வார் கலெக்டர் தீபா சோழன் உடன் இருந்தார். முன்னதாக மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் சிறப்பாக செயல்பட்டதாக கூறி ரோஜாப்பூ கொடுத்து கலெக்டர் தீபா சோழன் பாராட்டினார். அந்த சமயத்தில் கலெக்டர் தீபா சோழன், 5 மாடி கட்டிட விபத்து ஒரு துரதிர்ஷ்டசமான சம்பவம் எனக் கூறி கண்கலங்கினார்.