தமிழக தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி உள்ளது - வடலூரில் சீமான் பேச்சு
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் இருக்கிறது என வடலூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசினார். வடலூரில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சித்ரா, சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சிவஜோதி ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வடலூர்,
தமிழகத்தில் தி.மு.க., அ.தி. மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி தேர்தல் களத்தில் இருக்கிறது. இந்த மண்ணையும், நீரையும் பாதுகாப்போம், அதற்கான திட்டத்தை முன்வைப்போம்.
ஏன் என்றால் பசி வந்தால் பத்தும் பறந்து போகும். பசி இல்லாத உலகை உருவாக்குவோம். விவசாயி உருவாக்கும், உணவு பொருளுக்கு விவசாயியே, விலை நிர்ணயம் செய்யும் உரிமையை வழங்க வேண்டும். விவசாயத்தை தேசிய தொழிலாக ஆக்குவோம். அதில் படித்தவர்களை ஈடுபடுத்துவோம்.
ஏழை முதல் பணக்காரன் என எல்லோருக்கும் ஒரே மாதிரியான மருத்துவம் கிடைக்க வழிவகை செய்யப்படும், மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரமான கல்வியினை வழங்குவோம்.
அரசு பஸ்களில் குடை பிடித்து செல்லும், அவலம் இங்குதான் இருக்கிறது. ஆனால் தனியார் பஸ்கள் சிறப்பாக இருக்கிறது. லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சியினை தருவோம்.
இவ்வாறு சீமான் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி நிர்வாகி அமுதாநம்பி, மாநில நிர்வாகி கடல் தீபன், மாவட்ட செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.