அடுத்த சில நாட்களில் 104 டிகிரியை தொடும் வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

மும்பையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. அடுத்த சில நாட்களில் வெயில் அளவு 104 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

Update: 2019-03-25 22:45 GMT
மும்பை, 

மும்பையில் குளிர்காலம் முடிந்து கோடை கோலம் தொடங்கி விட்டது. இந்த மாதத்தின் முதல் 2 வாரங்கள் வரையிலும் குளிரின் தாக்கம் இருந்தது. ஆனால் ஹோலி பண்டிகைக்கு பின்னர் இந்த நிலை மாறி கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரங்களில் உச்சி வெயில் மும்பைவாசிகளை வாட்டி வதைத்து வருகிறது.

நேற்றும் காலை முதலே சூரியன் சுட்டெரித்தது. மதிய வெயில் மண்டையை பிளந்தது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் குளிர்பானங்களை வாங்கி குடிக்கின்றனர்.

ரெயில் நிலையங்களில் எலுமிச்சை, ஆரஞ்சு, கரும்புச்சாறு, ரோஸ்மில்க் உள்ளிட்டவற்றை பயணிகள் வாங்கி பருகுகிறார்கள்.

கடும் வெயிலின் காரணமாக தர்பூசணி, வெள்ளரிக்காயின் விற்பனையும் சூடுபிடித்து உள்ளது.

பெண்கள் தலையையும், முகத்தையும் துணியால் மூடிக்கொண்டு செல்வதை காண முடிகிறது. மும்பையில் நேற்று 98.06 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தற்போது வடக்கில் இருந்து மேற்காக வீசும் காற்றின் திசை மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பும். இதன் காரணமாக அடுத்த சில நாட்களில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் என வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்