வாகன சோதனை: தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.11.35 லட்சம் சிக்கியது
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.11.35 லட்சம் சிக்கியது.;
அம்பை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பை தோட்டக்கலை துறை உதவி இயக்குனரும், தேர்தல் பறக்கும் படை அலுவலருமான இளங்கோ மற்றும் கண்காணிப்பு குழுவினர் சேரன்மாதேவி-நெல்லை மெயின் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலப்பாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும், கட்டுக்கட்டாக பணம் இருந்ததும் தெரியவந்தது.
மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பீடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவர் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, அம்பை தாசில்தார் வெங்கடேசிடம் ஒப்படைத்தனர்.
தமிழக-கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை பார்டர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் கேரளாவை சேர்ந்த ஷாஜகான் என்பதும், ரூ.4 லட்சத்து 78 ஆயிரத்து 100-ம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், தலைமையிடத்து துணை தாசில்தார் அரவிந்த் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணபதி மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தியதில், எந்த ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 330 இருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, நாங்குநேரி தாசில்தார் ரகுமத்துல்லாவிடம் ஒப்படைத்தனர்.
தேவர்குளம் அருகே தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சாந்தி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை மறித்து நடத்திய சோதனையில், சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் சாலையை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பதும், அவரிடம் ரூ.64,500 இருந்ததும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து சங்கரன்கோவில் கருவூலத்திடம் ஒப்படைத்தனர்.
சிவகிரி அருகே டி.என்.புதுக்குடி மின்சார வாரிய அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜஸ்டின் ஜெயபால் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். விசாரணையில், செங்கோட்டை விசுவநாதபுரத்தை சேர்ந்த தங்கச்சன் என்பதும், சோதனையின் போது ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் மற்றொரு காரை நிறுத்தி நடத்திய விசாரணையில், கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை சேர்ந்த ராகுல் என்பதும், ரூ.70 ஆயிரம் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதற்கும் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.