வடமதுரை அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் - விவசாயி கைது

வடமதுரை அருகே வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-25 22:45 GMT
வடமதுரை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. தேர்தல் சுமுகமாகவும், நேர்மையாகவும் நடக்க உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

வடமதுரை அருகே உள்ள நாடுகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). விவசாயி. இவர், தனது வீட்டில் உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திரா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அவருடைய வீட்டில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது முருகன் வீட்டில் உரிமம் பெறாமல் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து முருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். தனது விவசாய தோட்டத்தில் வனவிலங்குகள் வராமல் தடுப்பதற்காக துப்பாக்கியை வைத்திருந்ததாக முருகன் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் துப்பாக்கியுடன் வடமதுரை போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வடமதுரை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவர் யாரிடம் நாட்டுத்துப்பாக்கியை வாங்கினார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் விழிப்புடன் செயல்பட்டு நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தர்மேந்திரா மற்றும் போலீசாரை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பாராட்டினார். 

மேலும் செய்திகள்