என்ஜின் கோளாறால் பழனியில் நின்ற திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் - 4 மணி நேரத்துக்கு பிறகு தாமதமாக புறப்பட்டது

என்ஜின் கோளாறால் பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் பழனியில் நிறுத்தப்பட்டது. பின்னர் 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு மீண்டும் ரெயில் புறப்பட்டு சென்றது.

Update: 2019-03-25 22:30 GMT
பழனி,

திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல பாலக் காட்டில் இருந்து திரும்ப திருச்செந்தூருக்கும் ரெயில் இயக் கப்பட்டு வருகிறது. இதில் கேரளாவில் இருந்து பழனி, திருச்செந்தூருக்கு செல்லும் பயணிகளுக்கும், தென்மாவட்ட பயணிகளுக்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது. குறிப்பாக திருவிழா நாட்களில் இந்த ரெயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்ட ரெயில் சுமார் 7.30 மணி அளவில் பழனி ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ரெயில் கிளம்பும் நேரத்தில் என்ஜினில் இருந்து மாறுபட்ட சத்தம் வந்ததை அடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினை சோதனை செய்தபோது, கோளாறு காரணமாக சத்தம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மதுரையில் இருந்து மாற்று என்ஜின் வந்து ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்கனவே ரெயிலில் வந்த பயணிகள் மற்றும் பழனியில் இருந்து வழக்கமாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் செல்லும் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர். பின்னர் சில பயணிகள் பஸ்சில் ஏறி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். கேரளாவில் இருந்து திருச்செந்தூர், மதுரை ஆகிய ஊர்களுக்கு வந்த பயணிகள் பழனி ரெயில் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்ததால் அவதிப்பட்டனர். தொடர்ந்து 4 மணி நேர தாமதத்துக்கு பிறகு 11.30 மணி அளவில் மதுரையில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு, பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்