மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

தோகைமலை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-03-25 22:15 GMT
தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி வடக்குதெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 23). பி.பி.ஏ. பட்டதாரியான, இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

தோகைமலை அருகே திருச்சி-திண்டுக்கல் பைபாஸ் இணைப்பு சாலையில் சென்றபோது, அந்த வழியாக காரைக்காலில் இருந்து கரூர் நோக்கி அதிகபாரம் ஏற்றி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட லோகநாதன் கை, கால்கள் துண்டாகி படுகாயமடைந்த உயிருக்கு போராட்டினார்.

டிரைவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் லோகநாதனை மீட்டு (துண்டாகி கீழே கிடந்த கை கால்களை பாலீதீன் பையில் வைத்துக்கொண்டு) சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார்மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து லோகநாதனின் உறவினர் வடசேரியை சேர்ந்த சின்னதுரை, தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடிபோதையில் இருந்த டிப்பர் லாரியின் டிரைவர் வெள்ளியணை அருகே உள்ள காளையபட்டியை சேர்ந்த சுப்பிரமணியை (47), போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்