சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல்
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த தொகுதியில் போட்டியிட கடந்த 22-ந் தேதி வரை தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று(செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் என்பதால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டினர்.
சேலம் அய்யந்திருமாளிகை பள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கே.ஆர்.எஸ்.சரவணன்(வயது 44). இவர் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். கே.ஆர்.எஸ். சரவணன் நேற்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட செயலாளர் கோபிநாத், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் அருள், தே.மு.தி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்தனர். அ.தி.மு.க. சார்பில் மாற்று வேட்பாளராக போட்டியிட கே.ஆர்.எஸ். சரவணனின் மனைவி கவிதா(37) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். அதைத்தொடர்ந்து சேலத்துக்கு தேவையான பல திட்டங்களை பெற்று செயல்படுத்துவேன்‘ என்றார்.
வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணன் பெயரில் மொத்தம் உள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.22 லட்சத்து 23 ஆயிரத்து 122 ஆகும். அவருடைய பெயரில் ரூ.6 லட்சம் மதிப்பில் அசையா சொத்து உள்ளது.
மாற்று வேட்பாளரான அவருடைய மனைவி கவிதா பெயரில் ரூ.13 லட்சத்து 9 ஆயிரத்து 963 மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் ரூ.11 லட்சம் மதிப்பில் தங்க நகைகள் அடங்கும். இந்த தகவல் அ.தி.மு.க. வேட்பாளர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா அம்மையப்பன்(57), விவசாயியான இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ராஜா அம்மையப்பன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபு மணிகண்டன்(28), பட்டதாரியான இவர் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். பிரபு மணிகண்டன் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுதவிர சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணியிடம் நேற்று மட்டும் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.