விளாத்திகுளம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் வேட்புமனு தாக்கல்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சின்னப்பன் போட்டியிடுகிறார். இவர் நேற்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், ஜெயலலிதா பேரவை குட்லக் செல்வராஜ், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு மாற்று வேட்பாளராக ஆனந்தராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ம.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் எரிமலை வரதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமாருக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி சங்கீதா வேட்புமனு தாக்கல் செய்தார்.
விளாத்திகுளம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் புதூர் யூனியன் தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதுதவிர நாம் இந்தியர் கட்சி வேட்பாளர் பொன்ராஜ், சுயேச்சை வேட்பாளர்களான கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்களம் ராஜீவ்நகரை சேர்ந்த தீபா வலன்டீனா, விளாத்திகுளம் அருகே புதூர் புது காலனியைச் சேர்ந்த பரமசிவம் ஆகியோரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நேற்று மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.