ஆனைமலையில், தனியார் விடுதியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - கடன் தொல்லையால் விபரீத முடிவு
ஆனைமலையில் தனியார் விடுதியில் கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆனைமலை,
ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 43). இவருடைய மனைவி பத்ரகாளி (42). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கருப்பண்ணனுக்கு சரியான தொழில் எதுவும் இல்லாததால், தனது குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். தற்போது கோட்டூர் ரோடு சி.டி.சி.காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இங்கு கருப்பண்ணன் வேனில் மளிகை பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார். மகன்கள் 2 பேரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால், குடும்பத்தை நடத்த பத்ரகாளி அக்கம் பக்கத்தில் உள்ள பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் அவர் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்த தனது மகளிடம் கூறிவிட்டு பத்ரகாளி வீட்டை விட்டு சென்றார். பின்னர் அவர் மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கருப்பண்ணன், மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று, தேடி பார்த்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் வழக்கமாக தங்கும் தனியார் விடுதிக்கு சென்று நேற்று விசாரித்தார். அப்போது பத்ரகாளி அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது.
உடனே அவர் விடுதியில் உள்ள ஊழியர்களுடன் அந்த அறைக்கு சென்றார். அந்த அறை உட்பக்கமாக பூட்டியிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு பத்ரகாளி தூக்கில் பிணமாக தொங்கினார். உடனடியாக இதுகுறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், அவர் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் விடுதியில் அறை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவருடைய கைபையில் விஷம், கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் தான் கோவிலுக்கு பத்ரகாளி வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.