நாசரேத் அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

நாசரேத் அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-25 22:00 GMT
நாசரேத்,

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை அடுத்த மேலவெள்ளமடம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). விவசாயி. இவருடைய மனைவி மகேசுவரி (35). இவர்களுக்கு முப்பிடாதி (14) என்ற மகள், ஒரு மகன். முப்பிடாதி, நாசரேத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மேல வெள்ளமடத்தில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்தது. இந்த நிலையில் மதியம் வீட்டில் தனியாக இருந்த முப்பிடாதி திடீரென்று தூக்குப்போட்டு கொண்டார்.

மாலையில் வீட்டுக்கு சென்ற பெற்றோர் தங்களுடைய மகள் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதனர். உடனே அவரை நாசரேத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முப்பிடாதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, முப்பிடாதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முப்பிடாதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்