காபி மேக்கர் கருவிக்குள் மறைத்து 1¼ கிலோ தங்கம் கடத்தல், கோவை விமான நிலையத்தில் கேரள வாலிபர் பிடிபட்டார்
கோவை விமான நிலையத்தில் காபி மேக்கர் கருவிக்குள் 1¼ கிலோ தங்கக்கட்டியை மறைத்து கடத்தி வந்த கேரள வாலிபர் பிடிபட்டார்.
கோவை,
சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையம் வந்து இறங்கியது. அதில் வந்த பயணிகளின் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஒரு வாலிபர் கொண்டு வந்த காபி மேக்கர் கருவி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கருவியை கழற்றி சோதனை நடத்தினார்கள்.
காபி மேக்கர் கருவியின் சூடேற்றும் பகுதியில் உள்ள சிறிய சிலிண்டர் பகுதி, தங்கக்கட்டியை உருக்கி, கருவிபோல் செய்யப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 1¼ கிலோ தங்கக்கட்டியை உருக்கி மறைத்து கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இந்த தங்கக்கட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 84 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜம்ஷத் (வயது 30) என்ற வாலிபரை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.