ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் வருகை - கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுடன் ஆலோசனை
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் தேனி வந்தார். அவர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.;
தேனி,
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இதற்காக தேர்தல் செலவின பார்வையாளர்கள் 2 பேர் ஏற்கனவே தேனிக்கு வந்து விட்டனர்.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு தனித்தனியாக தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு ஆந்திர மாநில நில அளவைத்துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பிரபாகர் ரெட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சரளா ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் பிரபாகர் ரெட்டி தேனிக்கு நேற்று வந்தார். தேனி சுற்றுலா விடுதியில் அவரை, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது தேர்தல் பொது பார்வையாளர், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் விவரம், பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும், பொது பார்வையாளர் பிரபாகர் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.