ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.- அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-25 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி போட்டியிடுகிறார். இவர் நேற்று ராமநாதபுரத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இருந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட கலெக்்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், அபுபக்கர் எம்.எல்.ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் ஆகியோர் சென்றனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நேற்று ராமநாதபுரம் அரண்மனை முன்பிருந்து அமைச்சர் டாக்டர் மணிகண்டன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர், ஆதரவாளர்களுடன் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வீரராகவராவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன் ஆகியோர் சென்றனர்.

மேலும் செய்திகள்