மாநிலத்தின் நிதிநிலைமை மோசமானதற்கு ரங்கசாமி தான் காரணம் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தின் நிதிநிலைமை மோசமானதற்கு ரங்கசாமிதான் காரணம் என்று அமைச்சர் கமலக்கண்ணன் குற்றம்சாட்டினார்.;

Update: 2019-03-25 23:15 GMT
காரைக்கால்,

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் காரைக்காலில் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்தது. தி.மு.க. அமைப்பாளர் நாஜிம், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வணங்காமுடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-

புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசாலும், மாநில கவர்னராலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கியுள்ளன. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில், கவர்னர் மாளிகை முன் இரவு பகலாக தொடர் போராட்டம் நடத்தியதால் ஒரு சில கோப்புகளில் கையெழுத்து பெற முடிந்தது.

இந்த போராட்டம் எதனால் நடைபெற்றது என கிராம மக்கள் உள்பட பலருக்கு புரியவில்லை. இதனை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி கட்சியினர், வீடு வீடாக சென்று புரியவைக்கவேண்டும். அப்போதுதான் பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் மக்களுக்கு புரியும்.

கடந்த 3 ஆண்டுகளாக புதுச்சேரியின் நிதி நிலைமை மோசமானதற்கு, ரங்கசாமிதான் காரணம். அவரது ஆட்சிக்காலத்தில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி கடனை, திருப்பி செலுத்துவதிலேயே பாதி நிதி சரியாக இருந்தது. அந்த வகையில் இதுவரை ரூ.400 கோடி கடனை செலுத்தியுள்ளோம். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,100 கோடி கடன் தொகையை செலுத்தி வருகிறோம்.

ஏழை, எளிய மக்களுக்கான மாதாந்திர இலவச அரிசியை வழங்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டவர் கவர்னர். அதையும் மீறி தற்போது வங்கியில் அரிசிக்கான பணம் செலுத்தப்படுகிறது என்றால் அது முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சாதுரியம்தான் காரணம். இதனை காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று மக்களிடம் விளக்கி, வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்