தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: தி.மு.க., என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் வெங்கடேசன் (தி.மு.க.), நெடுஞ்செழியன் (என்.ஆர். காங்கிரஸ் ஆகியோர் நேற்று வேட்புனு மனு தாக்கல் செய்தார்.

Update: 2019-03-25 22:30 GMT

புதுச்சேரி,

காங்கிரஸ் –தி.மு.க. கூட்டணியில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொழிலதிபர் வெங்கடேசன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் பாக்குமுடையான்பட்டு செல்வ விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். அதன்பின் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அடங்கிய ஊர்வலம் புறப்பட்டது.

ஊர்வலத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, சிவா மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

ஊர்வலம் வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை அடைந்ததும் வேட்பாளர் வெங்கடேசன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்மிதாவிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக குபேரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் வேட்பாளர் யார்? என்பதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி அறிவிக்காமல் இருந்தார். இந்தநிலையில் நேற்று என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக நெடுஞ்செழியன் அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கையோடு நேற்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக கதிர்காமம் முருகன்கோவிலில் ரங்கசாமி தலைமையில் வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதன்பின் நெடுஞ்செழியன் ரங்கசாமியுடன் காரில் வந்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்மிதாவிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அப்போது அன்பழகன் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து ஆகியோர் உடனிருந்தனர்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான நெடுஞ்செழியன் முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமியின் சொந்த அக்காள் தளிஞ்சியம்மாளின் மகன் ஆவார். இவரது தந்தை பழனியாண்டி. 55 வயதான நெடுஞ்செழியன் வீமகவுண்டன்பாளையம் ஓடைவீதியில் வசித்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் சசிகலா. காமேஷ் என்ற மகன் உள்ளார்.

மேலும் செய்திகள்