பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலி காப்பாற்ற குதித்த தாயும் உயிரிழந்த பரிதாபம்
பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் பலியானான். அவனை காப்பாற்ற வாய்க்காலில் குதித்த தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொங்கலூர்,
திருப்பூர் கருவம்பாளையம், ஆலாங்காட்டை சேர்ந்தவர் அப்துல்லா(வயது35). இவரது மனைவி அமீனா (27). இவர்களுக்கு ரியானா(8) என்ற மகளும், அப்துல் சலீம் (7) என்ற மகனும் உள்ளனர். அப்துல்லா கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமீனாவை விட்டு பிரிந்து சென்று விட்டார். தற்போது அமீனா கருவம்பாளையத்தில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ரியானா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறாள். அப்துல் சலீம் 2–ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் பொங்கலூர் அருகே கே.ஆண்டிபாளையத்தில் குடியிருந்து வரும் அமீனாவின் அண்ணன் சலீம் தனது மனைவிக்கு பிரசவ நேரம் என்பதால் உதவி செய்ய வருமாறு அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று காலை தன்னுடன் வேலை செய்து வரும் ஆனந்தராஜ் என்பவருடன் அமீனா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது வரும் வழியில் கே.ஆண்டிபாளையம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துவிட்டு செல்ல அனைவரும் முடிவு செய்தனர். இதையடுத்து அமீனாவையும், அவருடைய குழந்தைகளையும் பி.ஏ.பி. வாய்க்கால் அருகே இறங்கி விட்டு விட்டு, அருகில் உள்ள கடைக்கு சோப்பு வாங்குவதற்கு ஆனந்தராஜ் சென்றுவிட்டார்.
அந்த நேரத்தில் சிறுவன் அப்துல் சலீம் வாய்க்காலில் இறங்கி குளிக்க வேண்டும் என்று அடம்பிடித்துள்ளான். ஆனால் தண்ணீர் வேகமாக செல்வதாகவும், உள்ளே இறங்க வேண்டாம் என்று அமீனா தடுத்துள்ளார். ஆனால் படியில் நின்றுகொள்வதாக கூறிவிட்டு அப்துல் சலீம் இறங்கி உள்ளான். அந்த இடத்தில் தண்ணீரின் உள்ளே உள்ள படிக்கட்டு இடிந்து கிடந்துள்ளது. இது சிறுவனுக்கு தெரியவில்லை. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் அப்துல்சலீம் தண்ணீருக்குள் திடீரென்று விழுந்தான்.
அப்போது வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவனை தண்ணீர் இழுத்து சென்றது. இதனால் பதறி துடித்த தாய் அமீனா, வாய்க்காலில் குதித்து அப்துல் சலீமை காப்பாற்ற முயன்றார். இதனால் அவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. தாயும், தம்பியும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த சிறுமி ரியானா கதறி அழுதுள்ளார். சிறுமியின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தாயையும், மகனையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவர்கள் இருவரையும் நீண்ட தூரம் தண்ணீர் இழுத்து சென்றது.
இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அமீனாவின் உயிரற்ற உடலை ஆண்டிபாளையத்தில் இருந்து சற்று தொலைவில் வாய்க்காலில் துணி துவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீட்டனர். அப்போது தண்ணீரில் குதித்த சிறிது நேரத்திலேயே அமீனா இறந்து இருப்பது தெரியவந்தது.
அதுபோல் சிறுவன் அப்துல் சலீமின் உடலை மேட்டுப்பாறை என்ற இடத்தில் போலீசார் மீட்டனர். அவர்கள் இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய் மற்றும் தம்பியின் உடல்களை பார்த்து சிறுமி ரியானா கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.