அவினாசி அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3½ லட்சம் பறிமுதல் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் நடவடிக்கை
அவினாசி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 500–ஐ தேர்தல் நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அவினாசி,
வருகிற ஏப்ரல் மாதம் 18–ந்தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று அவினாசி வட்டம் புதுப்பாளையம் வெங்கமேடு பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வேனை ஓட்டி வந்தவர் பல்லடம் அய்யம்பாளையம் கே.எஸ்.என்.புறம் பகுதியைச்சேர்ந்த பச்சைமுத்து மகன் சீதாராமன்(வயது 37) என்பதும், அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் வேனில் 4,605 கிலோ எடையுள்ள கோழிகளை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குவாலிட்டி சிக்கன் சென்டரில் ஒப்படைத்துவிட்டு அதற்குரிய தொகை ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 500 பெற்று வந்ததாகவும் அதற்குரிய ஆவண விவரங்கள் தற்போது தன்னிடம் இல்லை என்றும் கூறினார். இதையடுத்து தேர்தல்நிலை கண்காணிப்புக்குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சீதாராமன் மேலும் கூறுகையில் பணத்திற்கு உரிய ஆவண விவரங்களை தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துவிட்டு தொகையை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட பணத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அவினாசி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.