ஆழ்குழாய் மின்மோட்டார் மூலம் கோடை நெல் சாகுபடி மானிய விலையில் உரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கோட்டூர் பகுதியில் ஆழ்குழாய் மின் மோட்டார் மூலம் கோடை நெல் சாகுபடி பணிகள் நடந்து வருகிறது.

Update: 2019-03-25 22:45 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆழ்குழாய் மின்மோட்டார் மூலம்(பம்பு செட்) தண்ணீர் இறைத்து கோடை நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் கூறியதாவது-

குறிச்சி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மின் மோட்டார் மூலம் 110 நாள் கொண்ட கோ-52 ரக நெல் கோடை சாகுபடி செய்து வருகிறோம். தற்போது மின் வினியோகம் நன்றாக உள்ளது. ஜூலை மாதம் வரை 4 மாதங்களுக்கு தொடர்ந்து மின் வினியோகம் வழங்க வேண்டும். உரத்தின் விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்து உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக உரமானியத்தை வழங்குவதாக அறிவித்து இதுவரை வழங்கவில்லை.

இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கோடை சாகுபடி செய்துள்ளவர்களுக்கு கணக்கு எடுத்து வங்கி மூலம் மானிய விலையில் உரம் வழங்க வேண்டும். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் மத்திய-மாநில அரசுகள் நெல் விலையை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்