அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல்

அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.-தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2019-03-25 23:15 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 5-வது நாளாக நேற்று இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க மாற்று வேட்பாளராக சாமிக்கண்ணு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோன்று அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க. வேட்பாளர் சி.கிருஷ்ணகுமார் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோட்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. மாற்று வேட்பாளராக சென்னகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அரூர் நகர தி.மு.க. செயலாளர் முல்லைசெழியன், மொரப்பூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜானகிராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார், தி.மு.க. வேட்பாளர் சி.கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் தி.சாமிக்கண்ணு, தி.மு.க. மாற்று வேட்பாளராக சென்னகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திலிப் என மொத்தம் 5 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் போட்டியிட ஏற்கனவே 2 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த தொகுதியில் இதுவரை மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்