சேலம் மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 1,152 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 3,288 வாக்குச்சாவடிகள், 11 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7,824 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4,533 கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் 4,251 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி. பேட் எந்திரங்கள் ஆகியவை சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வி.வி. பேட் எந்திரங்கள் ஆகியவற்றை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருடமான ரோகிணி தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது.
ஒதுக்கீடு செய்யப்படும் எந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நேற்று முன்தினம் தொடங்கி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்து விடும். எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் அமைக்கப்பட்ட ‘ஸ்டிராங்‘ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.
கெங்கவல்லி சட்டசபை தொகுதிக்கான எந்திரங்கள் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்திலும், ஆத்தூர் சட்டசபை தொகுதிக்கு ஆத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு வாழப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்திலும், ஓமலூர் சட்டசபை தொகுதிக்கு சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரியிலும், மேட்டூர் சட்டசபை தொகுதிக்கு மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்திலும் எந்திரங்கள் வைக்கப்படுகிறது.
எடப்பாடி சட்டசபை தொகுதிக்கு சேலம் ஏ.வி.எஸ். பொறியியல் கல்லூரியிலும், சங்ககிரி சட்டசபை தொகுதிக்கு சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அம்மாபேட்டையில் உள்ள சக்திகைலாஷ் மகளிர் கல்லூரியிலும் எந்திரங்கள் வைக்கப்படுகின்றன.