ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக அ.கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் தாமதமாக அழைத்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக அ.கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் தாமதமாக அழைத்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
நாடாளுமன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 19–ந் தேதி முதல் நடந்து வருகிறது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கலெக்டர் சி.கதிரவன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஈரோடு ஆர்.டி.ஓ.வுமான முருகேசன் ஆகியோர் வேட்புமனுக்கள் பெற்று வருகிறார்கள். கடந்த 22–ந் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறன் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
நேற்று காலையில் இருந்தே ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று பகல் 12.30 மணிக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தார். 100 மீட்டர் கோடு வரையப்பட்டு இருந்த பகுதியில் இருந்து அவர் நடந்து வந்து, கலெக்டர் அலுவலக வாயில் பகுதியில் காத்து இருந்தார்.
பகல் 1.45 வரை அவர் உள்ளே அழைக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து வேட்பாளர் அ.கணேசமூர்த்தி முதல் மாடியில் உள்ள கலெக்டர் அலுவலக வாசல் பகுதியில் சென்றார். அங்கு நின்றுகொண்டிருந்த அதிகாரிகளிடம் பேசிய அவர், எனக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 1 மணி முதல் 1.30 மணிவரை நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள். ஆனால் நேரம் கடந்தும் ஏன் என்னை அழைக்கவில்லை? என்று கேட்டார்.
ஆனால் அவருக்கு உரிய பதில் அளிக்காததால், அவர் அங்கேயே தரையில் உட்கார்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் வந்தவர்களும் தரையில் உட்கார்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்தனர்.
வேட்பாளர் கணேசமூர்த்தியை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். அங்கு கலெக்டர் சி.கதிரவனிடமும் அவர் தனது கோரிக்கையை தெரிவித்தார். அவருக்கு பதில் அளித்த கலெக்டர் சி.கதிரவன், வேட்பாளர்கள் யாருக்கும் நாங்கள் நேரம் ஒதுக்குவதில்லை. முதலில் வரும் வேட்பாளர்கள் முதலில் வேட்புமனு தாக்கல் செய்து செல்கிறார்கள். நீங்கள் வந்தபோது வேறு வேட்பாளர் அறையில் இருந்ததால் காலதாமதமாகிவிட்டது. வேட்பாளர்களுக்கு நேரம் ஒதுக்கியது குறித்து எந்த தகவலும் என்னிடம் இல்லை என்று தெரிவித்தார்.
பின்னர் விசாரித்தபோது, வேட்பாளர்கள் வசதிக்காக காவல்துறையில் இருந்து நேரம் கொடுத்து இருந்தது தெரியவந்தது. அதன்பேரில் சமாதானம் அடைந்த அ.கணேசமூர்த்தி வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து சென்ற பின்னர், முறைப்படி கணேசமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் என்றும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அ.கணேசமூர்த்தி கூறி இருந்தார்.
வேட்புமனுதாக்கல் முடிந்த பின்னர் அ.கணேசமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் கூறினோம். அதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரி ஒருவர் கைப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு 1 மணி முதல் 1.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினார். அதன்பேரில் 12.45 மணிக்கே வந்துவிட்டோம். ஆனால் குறிப்பிட்ட நேரம் கடந்தும் அழைக்கவில்லை என்றுதான் உள்ளே கேட்கச்சென்றோம். கலெக்டர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டோம். நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் தி.மு.க. வக்கீல் அணி சார்பில் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் ந.விநாயகமூர்த்தி ஆகியோர் வந்தனர். இவருக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மகன் கபிலன் வேட்புமனுதாக்கல் செய்தார்.
முன்னதாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் தி.மு.க. கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் அனைத்து கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கே.சீதாலட்சுமி. இவருக்கு வயது 43, எம்.ஏ., எம்.பில். படித்து உள்ளார். கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி வந்த இவர் தற்போது முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நாம்தமிழர் கட்சியின் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவரது கணவரின் பெயர் செழியன். இவருக்கு இசைமதி என்ற மகள் உள்ளார்.
முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மாட்டு வண்டியில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் பி.குப்புசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். இவர் கொடுமுடி அருகே உள்ள காகம் முத்தையன்வலசு பகுதியை சேர்ந்தவர். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் சண்முகபிரியா (26) என்பவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பி.கார்த்திகேயன் (44), சென்னிமலை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த கே.சுப்பிரமணியன் (55), அறச்சலூர் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்த ஏ.சி.கணேசமூர்த்தி (58), ஈரோடு பெரியசேமூர் பாரதிநகரை சேர்ந்த தர்மலிங்கம் (47) ஆகியோரும் நேற்று சுயேச்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மேலும் சுயேச்சை வேட்பாளர்களாக ஈரோடு காசிபாளையம் பகுதியை சேர்ந்த மு.கணேசமூர்த்தி, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த என்.பரமசிவம் ஆகியோர் ஈரோடு ஆ.டி.ஓ. அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 16 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.