நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 360 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் சரிவடைந்து 360 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 360 காசுகளாக சரிவடைந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-
சென்னை-375, ஐதராபாத்-320, விஜயவாடா, தனுகு-337, பார்வாலா-308, மும்பை-385, மைசூரு-365, பெங்களூரு-360, கொல்கத்தா-396, டெல்லி-340.
கறிக்கோழி கிலோ ரூ.81-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.84 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.64 ஆக நீடிக்கிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முட்டை நுகர்வு குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் விரதம் தொடங்கி இருப்பதால், கேரளாவிலும் முட்டை விற்பனை சரிவடைந்து உள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை குறைய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.